செஞ்சியில், சட்டத்துக்கு புறம்பாக பட்டாசுகளை ஏற்றி வந்த வாகனம் வெடித்து சிதறிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வடவானூர் கூட்ரோடு அருகே பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு சுதாரித்த ஓட்டுநர், வாகனத்தை சாலையின் ஓராமாக நிறுத்தினார். சில வினாடியில் அந்த வாகனம் வெடித்து சிதறியது. இதில் வாகன ஓட்டுநர், உதவியாளர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் அருகிலிருந்த புதரில் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். சட்டத்துக்கு புறம்பாக பட்டாசுகளை ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post