கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை தமிழகத்தில் நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு எனும் கொரோனா தடுப்பூசியை சோதனை செய்ய ஐசிஎம்ஆர் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னையை தெரிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் கோவிஷீல்டு செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும் எனவும், இந்த வெள்ளை அணுக்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்து விடும் எனவும் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post