தி.மு.க.வினர் மீதான நில அபகரிப்பு வழக்கு விசாரணைகளை சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2011-ம் ஆண்டு முதல்வராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர், முந்தைய தி.மு.க ஆட்சி காலத்தில் மிரட்டி நிலத்தை அபகரித்ததாக ஏராளமான புகார் வந்தன. இதையடுத்து, தி.மு.க.வினர் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவும், சிறப்பு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், நில அபகரிப்பு புகார் கொடுத்தவர், உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திமுகவினர் தொடர்பான வழக்குகளை சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திமுக தொடர்பான நில அபகரிப்பு புகாரை இனி சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களே விசாரிக்கலாம் என உத்தரவிட்டார்.