அவினாசி விபத்தில் கேரளாவைச் சேர்ந்த தம்பதியர் இருவர் மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த தம்பதியினர், அதிகாலை நேரத்தில் தாங்கள் உறங்கிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு மயக்க நிலைக்குச் சென்று விட்டதாகவும், கண் விழித்து பார்க்கும் போது மருத்துவமனையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அவினாசி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறியுள்ளார்.மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் தனி ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கேரள குழுவினர் வருவதற்கு முன்பே அனைத்து மீட்பு பணிகளையும் தமிழக காவல்துறை, தீயணைப்புத் துறை, மருத்துவர்கள் சிறப்பாக செய்திருந்ததாக பாலக்காடு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதை கேரள முதலமைச்சருக்கு தெரியபடுத்தியிருப்பதாக கூறிய அவர், கேரள அரசு சார்பாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
அவினாசியில் நடைபெற்ற விபத்தில், தமிழக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முழு கவனத்தோடு செயல்பட்டதால், உயிரிழப்பு அதிகரிக்காமல் குறைக்கப்பட்டதாக கேரள வேளாண்துறை அமைச்சர் சுனில் குமார் கூறியுள்ளார். சம்பவம் அறிந்தவுடன் கேரளாவிலிருந்து வந்த காவல்துறையினர், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பலரும் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post