கள்ளக்குறிச்சி பருத்தி வாரச் சந்தையில், 1 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு பஞ்சு மூட்டைகள் விற்பனையானது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பருத்தி ரகம் தரமானதாக இருப்பதால், விருதுநகர், ஈரோடு, ராஜபாளையம், சத்தியமங்கலம், அன்னூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மில் வியாபாரிகள், நேரடியாக பஞ்சு மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை கள்ளக்குறிச்சி வாரச் சந்தைக்கு, விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். இதனடிப்படையில், நேற்று நடைபெற்ற பருத்தி வாரச் சந்தைக்கு, விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட 6 ,200 பஞ்சு மூட்டைகள், 1 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. பஞ்சு மூட்டை ஒன்று அதிகபட்ச விலையாக 6,099 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை நிர்ணயம் மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.