குஜராத்தில், அம்மாநில முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில், சுமார் 650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி நேற்று ஆலோசனை நடத்தினார். காந்திநகரில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் நிதின் படேல் மற்றும் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஜமால்பூர்-காதியா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இம்ரான் கெதவாலாவும் இதில் கலந்துகொண்டார். இந்தநிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெதவாலாவுக்கு நேற்று மாலை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைபடுத்தப்பட்ட கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றதால், மற்றவர்களுக்கும் நோத்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
Discussion about this post