கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சித்த மருந்தை ஆய்வு செய்து, வரும் 30ம் தேதி அறிக்கை சமர்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்பிரமணியன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா வைரசை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும், அதை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹோமியோபதி, யுனானி மருந்துகளை கொடுத்து வருவதாகவும், புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு தொடர்பாக 35 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் வாதாடினார். தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை அரும்பாக்கத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ ஆய்வகம் தொடங்க உள்ளதாகவும், மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள மருந்தை, ஜூன் 26ம் தேதி சென்னை இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்குநரிடம் அளித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். நிபுணர் குழு அமைத்து புதிய மருந்தை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை ஜூன் 30ம் தேதி தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
Discussion about this post