இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல் பிரதேசம், மிசோரம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் விதிவிலக்காக திகழ்கின்றன. இந்தியா பல விநோத கலாச்சார மரபுகளையும், மாறுபட்ட புவியியல் கூறுகளையும் உள்ளடக்கிய நாடு. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் அடையாளமாக இருந்தாலும் கொரோனா பாதிப்பில் வேற்றுமையே இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா பகுதிகளிலும் அதன் தாக்கம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
ஆனால், வடகிழக்கு மாநிலங்களின் கொரோனா நிலவரம் வேறு வகையில் உள்ளது. அருணாச்சல் பிரதேசம், அஸ்ஸாம், மிசோரம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதுக்கும் குறைவாக உள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பில் எட்டு சதவீதமும், மக்கள் தொகையில் மூன்று புள்ளி ஆறு சதவீதமும் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று மிகவும் குறைவாக இருக்கக் காரணம் அப்பகுதி மக்களின் நோய் எதிர்ர்புத்திறனாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைப் போல் சமூகப்பரவலும் மிகக்குறைவாகவே உள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்ட 31 பேருடன் தொடர்புடைய சுமார் இரண்டாயிரம் நபர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு கொரோனா இல்லை. அதேபோல், அஸ்ஸாமில் கொரோனா பாதிக்கப்பட்ட 28 பேருடன் தொடர்புடைய ஆயிரத்து முந்நூறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதேபோல் வேறு சில அதிசயிக்கத்தக்க சம்பவங்களும் நடந்துள்ளன.
இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள மாநிலங்களுக்கான தேசிய சுகாதார திட்ட இயக்குநர் லக் ஷ்மணன், வடகிழக்கு மாநில மக்கள் அதிக நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கிறார்கள் என சொல்லிவிடமுடியாது. பாதிப்பு குறைவாக உள்ளதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், மற்ற அதிகாரிகள் மலேரியா பாதிப்பின்போது அப்பகுதி மக்கள் ஹைட்ராக்சிகுளோரோக்குயின் மருந்தை அதிக அளவு எடுத்துக்கொண்டது கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இதுகுறித்து பேசிய மணிப்பூர் சுகாதார இயக்குநர் கே.ரஜோ, மலேரியா ஒழிப்பு நடவடிக்கையின்போது எந்த காய்ச்சலாக இருந்தாலும் பெரும்பான்மையான மருத்துவர்கள் ஹைட்ராக்சிகுளோரோக்குயின் மருந்தையே பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், கொரோனா தொடர்பாக இத்தாலியின் பைசா நகரில் ஆராய்ச்சி செய்துவரும் ஆகாஷ் தீப் பிஸ்வாஸ்,ஹைட்ராக்சிகுளோரோக்குயின் உட்கொண்டது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் என இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். கொரோனாவின் பரவல், புவியியல் அமைப்பு, சீதோஷ்ண நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மாறுபடும் எனத் தெரிவித்துள்ள அறிவியலாளர்கள், ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளனர். மேலும் மலேரியாவை பரப்பும் அனோபீலிஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் கொரோனாவைத் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஏதேனும் மனித உடலில் உருவாகக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கொரோனா குறித்து முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகும் வரை காத்திருப்பதைத் தவிற வேறு வழியில்லை.
Discussion about this post