கடந்த பிப்ரவரி 11ஆம் தேதியன்று சீனாவில் 44,672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அப்போது சீனாவில் பதிவான நோயுற்றோர் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு சீன நாட்டின் நோய்த் தடுப்பு மையம் ஒரு ஆய்வை நிகழ்த்தி உள்ளது. அந்த ஆய்வின் புள்ளிவிவரங்கள்தான் இப்போது வெளிவந்து உள்ளன. மனிதர்களின் வயதைப் பொருத்து கொரோனாவின் தாக்கம் மாறுபடுவதையே இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பிப்ரவரி 11ஆம் தேதிவரையிலான இந்தப் புள்ளிவிவரங்களின்படி,
பிறந்த குழந்தைகள் முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு 416 பேருக்கு ஏற்பட்டது. இவர்களில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இங்கு இறப்பு சராசரி விகிதம் 0 ஆகும். மேலும் குழந்தைகளை கொரோனா
தாக்கும் போது அது எவ்வித அறிகுறிகளையும் வெளியிடுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
10 வயது முதல் 19 வயதுள்ளவர்களில் 549 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். இங்கு இறப்பு சராசரி விகிதம் 0.2 சதவிகிதம் ஆகும்.
20 வயது முதல் 29 வயது உள்ளவர்களில் 3619 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் 7 பேர் உயிரிழப்பை சந்தித்தனர். இங்கு இறப்பு சராசரி விகிதம் 0.2 சதவிகிதம் ஆகும்.
30 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்களில் 7,600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 18 பேர் உயிரிழப்பைச் சந்தித்தனர். இங்கும் இறப்பு சராசரி விகிதம் 0.2 சதவிகிதம் ஆகும்.
40 வயது முதல் 49 வயது வரை உள்ளவர்களில் 8571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 38 பேர் உயிரிழந்தனர். இங்கு இறப்பு சராசரி விகிதம் 0.4 சதவிகிதம் ஆகும்.
50 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களில் 10,008 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 130 பேர் உயிரிழந்தனர். இங்கு இறப்பு சராசரி விகிதம் 1.3 சதவிகிதம் ஆகும். இங்குதான் இறப்பு விகிதம் 1 சதவிகிதத்தை முதன்முறையாகத் தாண்டியது.
60 வயது முதல் 69 வயதுவரை உள்ளவர்களில் 8583 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இவர்களில் 309 பேர் உயிரிழந்தனர். இங்கு இறப்பு சராசரி விகிதம் 3.6 சதவிகிதம் ஆகும்.
70 வயது முதல் 79 வயதுவரை உள்ளவர்களில் 3,918 பேர் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 312 பேர் உயிரிழந்தனர். இங்கு இறப்பு சராசரி விகிதம் 8 சதவிகிதம் ஆகும்.
80 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 1,408 பேர் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 208 பேர் உயிரிழந்தனர். இங்கு இறப்பு சராசரி விகிதம் 14.8 சதவிகிதம் ஆகும். இங்குதான் இறப்பு விகிதம் இரட்டை இலக்கத்தை முதன்முறையாகத் தாண்டியுள்ளது.
இந்த ஆய்வில் இருந்து, வயதைப் பொருத்து கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கின்றது என்பது உறுதியாகி உள்ளது. ஆனாலும் வயதானவர்கள் கொரோனாவைப் பற்றி அதிகம் அச்சப்படுவதும், இளைஞர்கள் கொரோனா குறித்து அலட்சியமாக இருப்பதும் தவறு. ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிக மூத்த நோயாளியான 103 வயது பெண் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவமும், கால்பந்து பயிற்சியாளரான 21 வயது இளைஞர் ஒருவர் கொரோனாவுக்கு பலியான சம்பவமும் கூட உலகில் நடந்துள்ளன. எனவே கொரோனா குறித்த அச்சத்தைத் தவிர்ப்போம், விழிப்புணர்வோடு இருப்போம்.
Discussion about this post