இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ், இதுவரை 15 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், இது கொரோனாவுக்கு எதிரான போருக்கு பெருந்தடங்கலாக மாறக் கூடும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா உருவானது எப்போது? அதன் பாதிப்புகள் என்ன? என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு…..
பரிணாம உயிரியல் விதியின் அடிப்படையில் ஒரு வைரஸ் எப்போதுமே உருமாறிக் கொண்டேயிருக்கும். Mutation என அழைக்கப்படும் இந்த உருமாற்ற நிகழ்வு, இந்தியாவில் மும்முறை அடைந்திருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் B.1.617 என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு இருப்பதாக கண்டறிந்தனர். இந்த கொரோனா வைரஸ் E484Q மற்றும் L452R என்ற இரு உருமாற்றங்களுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. ஆனால், இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பதை கடந்த மார்ச் மாதம் தான் மத்திய அரசு உறுதி செய்ததோடு, 660 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும் கூறியது.
அதே நேரம், இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் கடந்த 4 வாரங்களில் 60% பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது மூன்றாவது உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஸ்பைக் புரோட்டீன் உட்பட வைரசின் மூன்று பாகங்கள் உருமாற்றம் அடைந்திருப்பதாகவும், இதனால், தொற்று பரவலின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளனர். மும்முறை உருமாறிய இந்திய கொரோனா வைரசின் தாக்கம், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கலாம் என கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் வேகமாக பரவி அதிக பேரை பாதிக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.
மும்முறை உருமாறிய இந்திய கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 15 நாடுகளுக்குப் பரவியுள்ளது. ‘தேசி’ ((Desi)) வைரஸ் என அடையாளப்படுத்தப்படும் இந்த வைரஸ், முதலில் பரவிய வைரசினை விட ஆபத்தானதா? வேகமாக பரவ கூடியதா? ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்தவர்களை இந்த வைரஸ் மீண்டும் தாக்குமா? எனப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படும் என்பது சந்தேகிக்கப்படும் நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கும், பிரிட்டன் கொரோனா வைரசுக்கும் எதிரான செயல்திறன் கொண்டது என கூறப்பட்டுள்ளது. அதே சமயம், கொரோனாவின் வேகத்தைவிட நாம் வேகமாகச் செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவுக்கும், மனிதர்களுக்குமான போரில் கொரோனாவை நாம் வெல்ல முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்….
Discussion about this post