திருச்சி – மதுரை புறவழிச்சாலையில் உள்ள கள்ளிக்குடியில், 77 கோடி ரூபாய் மதிப்பில் 10 ஏக்கர் பரப்பளவில் 700க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட மொத்த விற்பனை மையம் திறக்கப்பட்டது. தற்போது இங்கு வெளிநாட்டிலிருந்து கொரோனா அறிகுறியுடன் திருச்சி வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், 75 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்படுகிறது. இந்த சிறப்பு மையத்தில் 2 மருத்துவர்கள் உட்பட15 பேர் கொண்ட மருத்துவ குழு, மற்றும் 108 அவசர கால ஊர்தி என அனைத்தும் தயார் நிலையில் உள்ளனர். இந்த மையத்தில், ஹாங்காங்கிலிருந்து வந்த பெண்மணி சிகிச்சைக்கு வந்து நேற்று நலமுடன் வீடு திரும்பினார். இந்தநிலையில் நேற்று இரவு துபாய், சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, திருச்சி விமான நிலையம் வந்த வெளிநாட்டினர் 431 பேரில் 27 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டது. இவர்கள் 27 பேரும், இந்த மையத்தில், 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனையில் 7 பேருக்கும் கொரோனா சந்தேகத்தின் பேரில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post