கொரோனா இரண்டாவது அலை அசுரவேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவில இதுவரை இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 739 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதையடுத்து ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 38 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 17 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அங்கு தொற்று வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 93 ஆயிரத்து 528 பேர் தொற்றிலிருந்து மீண்டனர். 1லட்சத்து 6 ஆயிரத்து 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.