கொரோனா நோயின் தீவிரத் தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில், முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து வழங்கி செயல் திறனை ஆராய்வதற்கான அனுமதியை, முதலமைச்சர் வழங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதியவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோய், இருதயம் சார்ந்த நோய்கள் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் கடந்த 50 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோய்வுற்ற விகிதமும், உயிரிழப்பு விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி, முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தினை செலுத்தி அதன் செயல் திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், தமிழ்நாடு அரசின் அனுமதியை கோரியிருந்த நிலையில், இதனை ஏற்று உரிய அனுமதியை வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சோதனை முயற்சியை ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெகுவிரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post