கொரோனா சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் போன்ற பகுதிகளில் இருந்து 4 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறை மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை பின்பற்றி, கொரோனா சிகிச்சை மற்றும் ஆய்வுக்கான மருத்துவக் கழிவுகள், விழிப்புடன் கையாளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆய்வகங்கள், முகாம்கள், வீடுகள் போன்ற பகுதிகளில் இருந்து உருவான சுமார் 4 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவை 8 பொது மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனங்களில் உள்ள எரிப்பானில் ஆயிரத்து 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரியூட்டப்பட்டு சாம்பலாக்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கழிவுகள் மூலமாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post