இந்தியாவில் விழிவெண்படலத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை எந்த அளவில் உள்ளது? கண் தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பார்வையிழப்பை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக விழிவெண்படலப் பாதிப்பு உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு. இந்தியாவில் விழிவெண்படலப் பாதிப்பு காரணமாக முழுவதும் பார்வை இழந்தவர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். விழிவெண்படலப் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 ஆயிரம் பேர் பார்வையிழப்புக்கு ஆளாகின்றனர் என்கிறது புள்ளிவிவரங்கள்.
இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற்று உரிய முறையில் கண் வங்கியில் சேமித்து வைத்து, விழிவெண்படலப் பாதிப்பால் பார்வை இழந்திருப்பவர்களுக்குக் கண் பார்வையை அளிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவர் கண்களைத் தானம் செய்ய “104” என்ற இலவச எண்ணை அழைத்தாலும் போதும். கண்களைத் தானம் செய்ய என்னென்ன விதிமுறைகள் உள்ளது என்று விளக்குகிறார் கருவிழி அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரீத்தி.
பிறவிக் குறைபாடு, கிருமி நோய்த்தொற்று பாதிப்பு, குழந்தைப் பருவத்தில் “வைட்டமின் ஏ” சத்து குறைபாடு, காயம் அல்லது தழும்பு ஏற்படுவது முதலான காரணங்களால் விழிவெண்படலத்தின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்பட்டு பார்வையிழப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு மீண்டும் பார்வை வேண்டுமென்றால் கண் தானம் ஒன்றே தீர்வு என்கிறார் கருவிழி அறுவை சிகிச்சை நிபுணர் பிரீத்தி.
இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அரசு, அரசு சாராத கண் வங்கிகள் மூலம் 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. விழிவெண்படலப் பாதிப்பு காரணமாகப் பார்வையிழப்பு ஏற்படுவோரைக் குணப்படுத்த தேவையான கண்களின் விகிதத்தில், இது 50 விழுக்காடு மட்டுமே. அதனால் கண் தானம் செய்வோம், பார்வையின்றி தவிப்போரின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
Discussion about this post