இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது ஜவா மற்றும் பாலி தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இயற்கை பேரழிவுகளால் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் இந்தோனேசியாவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது .
ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது. இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து அந்நாடு மீண்டு வருவதற்குள் மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜவா மற்றும் பாலி தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.