மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளது – குஷ்பு விமர்சனம்

காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்றும், மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளதாகவும் அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க-வில் இணைந்த பின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகை குஷ்பு, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 6 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்த தன்னை நடிகையாக மட்டுமே பார்த்ததாக கூறுகிறார்கள்; காங்கிரஸ் கட்சிக்காக நான் உழைத்த போது, நடிகை எனத் தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்றும், வெளியில் செல்பவர்களிடம் காரணம் கூட கேட்பதில்லையென்றும் கூறினார்.

6 ஆண்டுகள் கடின உழைப்பை தான் வழங்கிய பிறகு, வெளியில் வந்தது பற்றிய காரணத்தை கூட அறியாத அளவிற்கு மூளை வளர்ச்சியற்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளதாக குஷ்பு குற்றம்சாட்டினார்.

பா.ஜ.க.-வில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய குஷ்பு, நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், தாமரை மலர வேண்டும் என்றார். பெரியார் திரைப்படத்தில் நடித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குஷ்பு “நடிப்புக்கும், கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளது” என்று தெரிவித்தார்.

Exit mobile version