அரசு அலுவலகங்களில் முழுமையான பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
கோப்புகளை வைப்பதற்கான உறைகள் காகித வடிவத்துக்கு மாறியதுடன், அலுவலக வளாகங்களில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, மக்காத பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருள்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றிக்கு தடை செய்யப்பட உள்ளன.
இந்தத் தடையை படிப்படியாக நடைமுறைக்குக் கொண்டு வரவும், அவற்றைக் கண்காணிக்கவும் மண்டல வாரியாக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒத்துழைப்பு தரும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொது மக்களுக்கும் தொடர்ச்சியாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பதற்கு முன்பாக, அரசு அலுவலகங்களில் அதனை இப்போதே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசு அலுவலகங்களில் கோப்புகளை வைக்கும் உறைகள் முழுவதும் காகிதத்துக்கு மாறியுள்ளன.பிளாஸ்டிக் கோப்பு உறைக்குப் பதிலாக முற்றிலும் காகிதத்தால் செய்யப்பட்ட உறைகளே பயன்பாட்டுக்கு வந்துள்ளன.