சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட வினியோக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வினியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக, வினியோக நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்கப்படுகிறது எனவும், இந்த தொகையை, டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், வினியோக முகவர்கள் எடுத்துக் கொண்டு, நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட வினியோக நிறுவனத்திற்கு கமிஷன் தொகையில் 20 முதல் 35 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 முறை இந்த முறைகேடுகளில் ஈடுபட்டால் வினியோக நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post