மத்திய அரசு வெளியிட்டுள்ள, இந்தியாவின் தலைசிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள், அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன. கலைநயமிக்க கட்டிடங்கள்… அமைதியான கல்விச் சூழல்… பாரம்பரியப் பெருமை… மாணவர்களின் நலனில் காட்டும் அக்கறை… என்பனவற்றின் அடிப்படையில், இந்தியாவில் தலைசிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின், இந்தாண்டுப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் இடம்பிடித்துள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில், டெல்லியைச் சேர்ந்த மிரண்டா ஹவுஸ் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை லேடி ஸ்ரீராம் கல்லூரியும், மூன்றாவது இடத்தை இந்து கல்லூரியும் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் மாநிலக் கல்லூரி 5-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. மத்திய அரசின் தரப்பட்டியலில், தங்கள் கல்லூரி சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதால், மாநிலக் கல்லூரியின் பேராசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்துள்ளனர். கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதித் திறன், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், ஆசிரியர்-மாணவர்கள் ஆகியோரின் ஆராய்ச்சித் திறன், மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, இந்தப் பட்டியலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிடுவதாகவும், அதில் தங்கள் கல்லூரி இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய அளவில் மாநிலக் கல்லூரி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், 6-வது இடத்தில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியும், 10-வது இடத்தில் கோவையில் செயல்பட்டுவரும் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும், 17-வது இடத்தை, தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியும் பிடித்துள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள கல்லூரிகளின் தரப் பட்டியலில், டெல்லியைச் சேர்ந்த கல்லூரி முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளே, மற்ற மாநிலங்களின் கல்லூரிகளைவிட அதிக அளவில் இடம் பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் உயர் கல்வித்துறை மேற்கொண்டுவரும் சீரிய நடவடிக்கைகளே, தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள் தரத்தில் மற்ற மாநில கல்லூரிகளைவிட அதிகளவில் இடம்பிடித்துள்ளன என்று கல்வியாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post