இரண்டு ரூபாயில் தாவர நார் நாப்கின்களை தயாரித்து திருச்சி தனியார் கல்லூரி மாணவர்கள் அசத்தியுள்ளார்கள்.
திருச்சி தனியார் கல்லூரியின் தாவரவியல் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்களுடைய இறுதி ஆண்டு திட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில்-சமூகத்திற்கும், பெண்களுக்கும் உபயோகமான பொருள் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தனர். இதன்படி மலைவாழ் மக்களிடம் கள ஆய்வு நடத்தினர்.
திருச்சியை சுற்றியுள்ள கொல்லிமலை, பச்சைமலை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பல்வேறு கள ஆய்வை நடத்தினர். தங்கள் கள ஆய்வின் முடிவில் அதை மேம்படுத்தி சீமை கற்றாலை என அழைக்கப்படும் ஒருவகை தாவரத்திலிருந்து நாப்கின்களை தயாரிக்க முடிவு செய்தனர். சீமை கற்றாழை வகையைச் சேர்ந்த இந்தச் செடிகளிலிருந்து முதலில் நார்களை பிரித்தெடுத்து, சற்று கடினமாக உள்ள அந்த நாரை மென்மைபடுத்துவதற்காக சோடியம் ஹைட்ராக்சைடில் நனைத்து, அந்த நார்களையும் பஞ்சையும் அடுக்குகளாக வைத்து இந்த நாப்கின்களை தயாரிக்கின்றனர்.
இறுதியில் இந்த நாப்கின்களை யுவி கதிர்கள் என்று சொல்லப்படும் புற ஊதாக்கதிர்களின் உதவியுடன் பயன்பாட்டிற்கு உகந்த சுகாதார முறையில் தயாரித்து முடிக்கின்றனர். இதற்கென முதலில் இந்த நார்களை பிரித்தெடுத்து, இதனுடைய உறிஞ்சும் தன்மையை பரிசோதித்ததாகவும், பிறகு இந்த கற்றாழை செடிகளில் இயற்கையாகவே நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளதை கண்டறிந்ததாகவும், இதற்காக FTIR எனப்படும் உறிஞ்சும் தன்மையை பரிசோதித்த பிறகே இந்த நார்களை பயன்படுத்தி நாப்கின் தயாரித்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் வழிகாட்டுதலின் பேரில் இந்த ஈக்கோ பிரண்ட்லி நாப்கின்கள் தயாரிக்கப்படுவதாகவும், சாதாரண நாப்கின்களை விட இவற்றின் உறிஞ்சும் தன்மை அதிகமாக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் அலர்ஜி தவிர்க்கப்படுவதுடன், முழுவதும் இயற்கை மூலப் பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், விரைந்து மக்கும் தன்மையை கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் டாக்டர் பிரான்சிஸ் சேவியர் தெரிவிக்கிறார்
ஏற்கனவே கடையில் விற்கப்படும் சாதாரண நாப்கின்கள் 30 ரூபாய் முதல் விற்பனையாகும் நிலையில், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பல நாப்கின்கள் 59 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், இந்த ஒரு நாப்கினின் விலை இரண்டு ரூபாய் மட்டுமே என்று தெரிவிக்கின்றனர்.
இயற்கையோடு இணைந்த, சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய, குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய இந்த நாப்கின்களை, குறிப்பாக கிராமப்புற, மலைவாழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாகவும், சுயதொழில் செய்கின்ற திருநங்கைகள் போன்றோருக்கு இது உதவும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.
சுற்றுச்சூழலுக்கும் பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு நாப்கின்களை தயாரித்துள்ள மாணவர்களுடைய முயற்சியை சக மாணவர்களும் ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post