பிறப்பிலிருந்தே தொழுநோயால் பாதிக்கப்பட்டு 85 ஆண்டுகள் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி குறித்து கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர், ஒரு மணி நேரத்தில் அரசு உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பத்தை சேர்ந்தவர் மூதாட்டி அம்சா. பிறப்பிலிருந்தே தொழுநோயால் பாதிக்கப்பட்டு திருமணம் செய்துகொள்ளாமல், 85 வயதிலும் தனிமையில் வசித்து வருகிறார். அந்த மூதாட்டி தமக்கு உதவித்தொகை வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்து பேசிய வீடியோவை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பார்த்துள்ளார்.
பார்த்த ஒரு மணி நேரத்தில் மூதாட்டிக்கு மாற்றுத்திறனாளிக்கான ஓய்வு ஊதியம் வழங்க உத்தரவு பிறப்பித்ததையடுத்து, வாணியம்பாடி சமூக நல பாதுகாப்பு தனி வட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையிலான வருவாய் துறையினர் மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று உதவித்தொகை, புதிய ஆடை, இனிப்பு வகைகளை வழங்கினர்.
மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post