ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடியில் போதிய வருமானம் கிடைப்பதால் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஈரோட்டில் நெல், கரும்பு, வாழை சாகுபடிக்கு அடுத்த படியாக தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக தென்னைமரத் தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்கு சென்றதால், தென்னை சாகுபடியில் தேங்காய் இறக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் சரியான நேரங்களில் தேங்காய் இறக்க முடியாத நிலை உள்ளது.
இதனைபோக்கும் விதமாக கோபிச்செட்டிபாளையம் வேளாண் அறிவியல் நிலையத்தில் செயல்பட்டு வரும், தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சுற்று வட்டார பகுதிகளான கொப்பலூர், சிறுவலூர், கலியங்கியம் ஆகிய பகுதிகளில் இருந்து 20 ஆண்கள் மற்றும் 20 பெண்களுக்கு அனுபவமிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு, புதிய தொழிழ்நுட்ப கருவியுடன் தென்னை மரம் ஏறும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆண்களுக்கு, பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அப்பகுதி பெண்கள் புதிய தொழிற்நுட்ப கருவியுடன் தென்னை மரம் ஏறும் பயிற்சியை பெற்று வருகின்றனர். தினமும் இந்த பயிற்சி மட்டுமின்றி, மன அமைதி ஏற்படுத்தும் விதமாக தென்னை சாகுபடி, சொட்டுநீர் பாசனம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள், தென்னை சாகுபடியில் மகசூலை அதிகரிப்பது போன்ற புதிய தொழில் நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இரண்டு நாள் பயிற்சிக்கு பிறகு பெண்கள் சாதாரணமாக மரம் ஏறி தேங்காய்களை இறக்குகின்றனர். முதலில் தயங்கிய பெண்கள் புதிய கருவியின் உதவியால் எளிதாக மரம் ஏறி தேங்காய் இறக்க முடிகிறது என்றும், திடிரென வீட்டிற்கு உறவினர்கள் வந்து விட்டால் ஒருநிமிடத்தில் இளநீர் இறக்கி கொடுக்க எளிதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தங்களது விவசாய நிலங்களில் தாங்களே தென்னை சாகுபடி செய்து, அதை தாங்களே அறுவடை செய்வது மனதிற்கு திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். வரும் காலங்களில் நாற்பது, ஐம்பது வயதை கடந்த பெண்களும் தென்னை சாகுபடியை செய்வதற்கு முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோருக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி வழங்கப்பட்டது. முதலில் கடினமாக இருந்த மரம் ஏறுதல், பயிற்சிக்கு பிறகு எளிமையாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். விஞ்ஞானம் முதல் விவசாயம் வரை அனைத்து துறையிலும் சாதனை படைத்து வரும் பெண்கள் நிச்சயம் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை கோபிசெட்டிபாளையம் பெண்களும் , கோவை கல்லூரி மாணவிகளும் நிரூபித்து வருகின்றனர்.
Discussion about this post