இந்தியாவில் கடந்த மாதம் மட்டும் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகி உள்ளதாக பொருளாதார கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 40 லட்சம் அதிகரித்து உள்ளதாக, இந்தியப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து கவனித்துவரும் அமைப்பான சி.எம்.ஐ.இ. (Centre For Monitoring Indian Economy) தெரிவித்து உள்ளது.
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் 40 கோடி வேலை வாய்ப்புகள் இருந்த நிலையில், அது ஜூலையில் 40 கோடியே 40 லட்சமாக உயர்ந்துள்ளதாக சி.எம்.ஐ.இ. அமைப்பின் ஆய்வு கூறுகின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 39 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி இருந்தன, அதைவிட இந்தாண்டின் வேலை வாய்ப்புகள் ஒரு லட்சம் அதிகமாக உள்ளன.
மேலும் தனது ஆய்வில் இந்தப் புதிய வேலை வாய்ப்புகளில் பெரும்பாலானவை இந்தியக் கிராமங்களில் உருவானவை என்று சி.எம்.ஐ.இ. அமைப்பு கூறுகின்றது. ஜூலை மாதத்தில் இந்திய கிராமங்களில் சுமார் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன, ஆனால் இந்திய நகரங்களில் 27 லட்சம் வேலை இழப்புகள் நிகழ்ந்ததால் நிகர வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 40 லட்சமாக உள்ளது.
இந்திய ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புகள் இந்திய பொருளாதாரத்தில் தேக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்பட்டு வந்த நிலையில், இந்தப் புதிய வேலை வாய்ப்புகளால் இந்தியப் பொருளாதாரம் சமநிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Discussion about this post