கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசுகையில், திமுக வேட்பாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்பு கூறிய ஸ்டாலின், தற்போது அவரை புகழ்ந்து பேசி, நாடகம் ஆடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தேர்தலுக்கு பிறகு தொழிலாளர்கள் நலனுக்காக அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக உள்ள திமுக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் தமிழகம் கடுமையாக பாதிப்பை சந்தித்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்திட்டத்தால், தற்போது மின்வெட்டில்லா மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
பெருந்தலைவர் காமராஜர் மறைவின்போது மெரினாவில் இடம் கொடுக்காதவர் கருணாநிதி என்று கூறிய முதலமைச்சர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வழங்க முன்வந்தது அதிமுக அரசு என்றார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் கூடுதலாக வழங்கப்படுவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர் அப்போது இதனை தெரிவித்தார்.