திமுகவும், தினகரனும் கூட்டணி வைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது: முதல்வர்

திமுகவும், டிடிவி தினகரனின் கட்சியும் மறைமுக கூட்டணி வைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மதுரை மாவட்டம், தனக்கன்குளம் பகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள திருநகரில் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோருடன் பிரசாரத்தின் இடையே கடைக்குச் சென்ற அவர் தேநீர் அருந்தினார்.

பின்னர் நிலையூர் கைத்தறி நகரில் வீடு வீடாக நடந்து சென்று, பொதுமக்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். நெசவுத் தொழிலுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழகத்தை மின்மிகை மாநிலமாக அதிமுக அரசு மாற்றியுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக முதலமைச்சர் பிரசாரம் செய்த அவர், கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக என விமர்சனம் செய்தார். நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் வீடுகட்டியவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Exit mobile version