விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினரால்தான், பெண்களுக்கு தொல்லை ஏற்படுவதாக கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, வாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்களைச் சொல்லி மக்கள் ஏமாற்றும் திமுகவிற்கு, இந்த தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
சட்டம்-ஒழுங்கில், தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக அரசு மீது பொய் குற்றச்சாட்டு வைக்கும் திமுவினரால்தான், பெண்களுக்கு தொல்லை ஏற்படுவதாக உதாரணங்களோடு, ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க உதவி புரிந்தது காங்கிரஸ் கட்சிதான் என குற்றம்சாட்டினார். மேலும், ஆட்சி கலைந்து விடும் என நீண்ட காலமாக சொல்லி வரும் ஸ்டாலினுக்கு , 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவோடும் மக்களுடைய ஆதரவோடும் 2 ஆண்டுகளை கடந்து தற்போதைய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பதில் அளித்தார்.
தமிழகத்தில் கல்வித்துறையின் தரத்தை அதிமுக அரசு வெகுவாக உயர்த்தியுள்ளது எனவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன எனவும் பெருமிதம் குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழகத்தில் அதிகமான அரசு கலைக்கல்லூரிகளை உருவாக்கியது அதிமுக அரசுதான் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனை அரசு கலைக்கல்லூரிகளை ஏற்படுத்தியது என்றும் திமுகவிற்கு கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் பேசுவதெல்லாம் பொய்யாக உள்ளதாக குற்றச்சாட்டிய முதலமைச்சர், காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, தமிழக நலனை கருத்தில் கொள்ளாமல், சுயநலத்துடனேயே செயல்பட்டதாக பொது மக்கள் அனைவரும் அறிவர் என கூறினார்.