கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் கோடி ரூபாய்க்கு இடைக்கால நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் நிவாரண முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், சாலைகள்,பொது கட்டிடங்கள், வீடுகள் போன்றவை சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தேவையான நிதி ஒதுக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு மறுசாகுபடி செய்வதற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 72 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கபடும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கஜா புயலால் சேதமான நெற்பயிர், கரும்பு, வாழை, காய்கறிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயும், முந்திரி பயிர் சேதங்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சேதமடைந்த ஒரு தென்னை மரத்திற்கு 600 ரூபாயும் அதை அகற்றுவதற்கு 500 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நெல், வாழை, முந்திரி போன்ற பயிர்களை மறுசாகுபடி செய்ய 50 சதவீதம் வரை மானியம், வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர்,
சொட்டுநீர் பாசனம் அமைக்க ஹெக்டருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரத்திற்கு 42 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும்,
முழுவதும் சேதமடைந்த ஃபைபர் படகுக்கு 85 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த ஃபைபர் படகுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post