ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 4 வயது கூட நிரம்பாத சிறுமி ஒருவர் தன்னுடைய மழலை மொழியால் சிவபுரணாத்தின் 95 அடிகளைப் பிறழாமல் ஒப்புவித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்
95 அடிகளைக் கொண்டு சிவபுராணம் மாணிக்க வாசகர் தமிழுக்கு வழங்கிய அற்புத கொடைகளுள் ஒன்று. பன்னிரு திருமறைகளில் எட்டாம் திருமறையான சிவபுராணத்தை மனப்பாடம் செய்வதும், ஒப்புவிப்பதும் தற்கால மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சற்று கடினம் தான்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சிறுமி சரசு பாரதி ஒருவர் சிவபுராணத்தில் உள்ள வரிகளை அடிபிறழாமல் மழலைச் சொல்லில் தெளிவாக ஒப்புவிக்கிறார். மேலும் 15 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்கிறார்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வரும் சரசு பாரதி படிப்பிலும் வல்லவராகத் திகழ்கிறார். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை நடத்தும் போது உன்னிப்பாக கவனிக்கிறார். தாய் தந்தையர் வீட்டில் சாமி கும்பிடும் போது சிவபுராணம் சொல்வதைக் கேட்டு சொல்லத் தொடங்கியுள்ளார்.
தன் மடியில் உட்கார்ந்து ஒவ்வொரு நாளும் தான் சிவபுராணத்தை பாராயணம் செய்ததை ஆர்வத்துடன் கவனித்து வந்ததாகவும்,
ஒருநாள் தனியாக வீட்டில் அனைத்து வரிகளையும் மனப்பாடமாக சொன்னது தனக்கே ஆச்சரியத்தை அளித்ததாகவும் சரசு பாரதியின் தந்தை தெரிவிக்கிறார்.
நவீன காலங்களில் பெற்றோர்கள் பார்க்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை அப்படியே உள்வாங்கும் குழந்தைகள் மத்தியில் தமிழ் மணம் கமழும் சிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் சரசு பாரதி ஆச்சரியமான சிறுமி என்பதில் சந்தேகமில்லை
Discussion about this post