குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி, இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று, பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.
இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதியானது.
புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சரவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசுகிறார். வடகிழக்கு மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா இன்று தாக்கலாகிறது.
Discussion about this post