இன்றைய காலக்கட்டத்தில் வாசிக்கும் பழக்கம் குழந்தைகளிடம் வெகுவாக குறைந்து வருகிறது. அதை புதுப்பிக்க சுட்டியானை சிறுவர் இதழ் குழு களமிறங்கியது. குழந்தைகள் சார்ந்தும் சூழலியல் சார்ந்தும் ஒரு மாத இதழை குழந்தைகளுக்கு கொடுக்க எண்ணி அரசு பள்ளி மாணவர்களும் வாசிக்க வேண்டும் என நினைத்து முடிந்த வரையில் குறைந்த விலையில் ஒரு மாத இதழைக் கொண்டு வந்துள்ளது இக்குழு. ஒரு நாள் ஒரு ரூபாய் சேர்த்து வைத்து மாதம் 30 ரூபாயில் இப்புத்தகத்தை வாங்க வேண்டும் என சிறிய முயற்சியில் உருவாக்கப்பட்டது இந்த மாத இதழ்.
குழந்தைகள் சார்ந்த பாட்டி சொன்ன கதைகள், தாத்தா சொன்ன புதிர்,கணித விளையாட்டு,வரலாற்று கதைகள்,விண்வெளி கதைகள், ஒவ்வொரு மாதமும் ஒரு பறவை- ஒரு தாவரம் – ஒரு கடல் உயிரினம் பற்றிய தகவல்கள், குப்பையிலிருந்து குழந்தைகளே செய்யும்படியான கலைப் பொருட்கள் என பல புதுமையான பகுதிகளை இதில் கொண்டுவந்துள்ளனர். இந்த அனுபவத்தை புத்தகத்தில் மட்டுமே நிறுத்தி விடாமல் நேரிலும் குழந்தைகளுக்கு காட்ட ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டதில் குழந்தைகளுக்கான இயற்கை சார்ந்த பயில் முகாமை நடத்தி வருகின்றனர்.
இந்த பயில் முகாமில் காடறிதல்,பறவைகள் காணல் பூச்சிகள், சிற்றுயிர்கள் கண்டு ரசித்தல், கதை சொல்லல்,மரபு விளையாட்டுகள், பனை& தென்னை, ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்தல்,திரையிடல்,குழந்தைகளே நிகழ்த்தும் நிழற்பாவை கூத்து என பல நிகழ்வுகளின் மூலம் இயற்கை சார்ந்த வாழ்வியலை பிள்ளைகளுக்கு கடத்துகின்றனர்.
இதன் முதல் பயில் முகாம் கொக்கு பூத்த வயல்கள் என்னும் பெயரில் பொள்ளாட்சி அருகே உள்ள ஆழியாறு பகுதியில் நடந்தது.இதில் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இரண்டாவது நிகழ்வு மேகங்களின் கூடுகை என்னும் பெயரில் இராஜபாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் மூன்றாம் நிகழ்வு ஜவ்வாது மலையில் உள்ள வலசை வாழ்வியல் பள்ளியில் மலை அழைக்கிறது என்னும் பெயரில் நடைப்பெற்றது. மேலும் மலை கிராமங்களில் சுட்டியானை சிறார் நூலகத்தை ஆரம்பிக்கவும் இந்தக் குழு ஆயத்தமாகி வருகிறது.
எங்கோ தொலைவறியா தூரத்தில் கண் திறந்த நீர்ச்சுனையின் செயலாற்றுதலுக்கான முதலடியை சுட்டியானை சிறுவர் இதழ் தொடங்குகிறது.இந்த சுட்டியானை சிறுவர் இதழை இயல்வாகை வெளியிடுகிறது.
இந்த குழுவினர் நடத்தும் அடுத்த பயில் முகாம் நிகழ்வு சோலைக்காட்டில் குழந்தைகள் திருவிழா என்னும் பெயரில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் ஏப்ரல் 17,18 சனி ,ஞாயிறு இரண்டு நாட்கள் நடக்க இருக்கிறது.
Discussion about this post