நேபாளத் தலைநகர் காத்மண்டுக்குச் சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு அந்நாட்டு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பும் விருந்தும் அளிக்கப்பட்டது.
சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு நேபாளத்துக்குச் சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்கைக் காத்மண்டு விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.
அதன்பின் அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சீனா – நேபாளம் இடையில் பல்வேறு துறைகளில் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், நேபாளத்தில் ரயில்பாதை அமைப்பது, நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு விருந்தில் இருநாட்டுத் தலைவர்களும் குழுவினரும் கலந்துகொண்டனர். அப்போது நேபாளப் பாரம்பரியச் சிறப்புமிக்க உணவு வகைகள் பரிமாறப்பட்டன. விருந்தின் இடையே பேசிய இரு தலைவர்களும், அண்டை நாடுகளான நேபாளம் சீனா இடையே பண்டைக்காலந் தொட்டே பண்பாடு, வணிகம் ஆகிய துறைகளில் உறவு இருந்து வருவதைச் சுட்டிக்காட்டினர்.
Discussion about this post