பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றுச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானத்தில் நாளை பிற்பகல் ஒன்றரை மணிக்குச் சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார். அவருக்கு முன்பே சென்னைக்கு விமானத்தில் வரும் பிரதமர் மோடி, ஜி ஜின்பிங்கை வரவேற்கிறார். இந்த வரவேற்பு நிகழ்ச்சி சுமார் 15 நிமிட நேரம் நடைபெற உள்ளது. இதன் பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளத்தில் உள்ள விடுதிக்குச் செல்கிறார்.
விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் ஒன்றே முக்கால் மணிக்குப் புறப்படும் ஜி ஜின்பிங், 2 மணிக்குக் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதிக்குச் செல்கிறார். அங்குத் தங்கி ஓய்வெடுக்கும் ஜி ஜின்பிங், மாலை 4 மணிக்குச் சாலைவழியாகக் காரில் மாமல்லபுரத்துக்குச் செல்கிறார். மாலை 4.55 மணி அளவில் மாமல்லபுரம் சென்றடைகிறார். அங்கு அவரைப் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர். அதன் பின்னர், தலைவர்கள் இருவரும், மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் வரப் பழைமையான கலைச் சின்னங்களைப் பார்வையிடுகின்றனர்.
மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலுக்கு அருகே அமைத்துள்ள குண்டு துளைக்காத கண்ணாடி மண்டபத்தில் இரவு விருந்தில் தலைவர்கள் இருவரும் பங்கேற்கின்றனர். இரவு 8.05 மணி அளவில் மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டுக் கிண்டி விடுதிக்கு ஜி ஜின்பிங் வந்து சேர்கிறார். 12 ஆம் தேதி காலை 9.05 மணிக்குக் கிண்டியில் இருந்து புறப்படும் ஜி ஜின்பிங், 9.50 மணி அளவில், மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதிக்குச் செல்கிறார். அங்கு அவரும், பிரதமர் மோடியும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்துகின்றனர்.
மதியம் 12.45 மணி வரை இருவரும் பேச்சு நடத்துவதோடு, மதிய விருந்தும் நடைபெறுகிறது. விருந்துக்குப் பின்னர் அங்கிருந்து புறப்படும் ஜி ஜின்பிங் 1.25 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்து சேர்கிறார். ஒன்றரை மணிக்கு அவர் சென்னையில் இருந்து சீனாவுக்குத் தனி விமானத்தில் புறப்படுகிறார்.
Discussion about this post