தெருவிளக்குகளின் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக, நிலவை விட பன் மடங்கு வெளிச்சத்தை கொடுக்கக் கூடிய செயற்கை நிலவை விண்ணில் செலுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.
பகலில் சூரியன், இரவில் சந்திரன் நம் பூமிக்கு வெளிச்சம் தருகின்றனர். அதனால் பகலில் தெருவிளக்குகளுக்கு வேலை கிடையாது. ஆனால் இரவில் சந்திரன் ஒளி அந்த அளவிற்கு பிராகாசிப்பதில்லை எனவே நாம் தெருவிளக்குகளை பயன்படுத்தி வருகிறோம். வீட்டு விளக்குகளாலும், தெரு விளக்குகளாலும் அதிகப்படியான மின்சார செலவாகிறது. இதற்காக சீனாவின் செங்க்டு என்ற நகரத்தில் தெருவிளக்குகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு செயற்கை நிலாவை இரவு நேரங்களில் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.
பூமியின் நிலவை விட எட்டு மடங்கு பிரகாசமாக இருக்கக்கூடிய செயற்கை நிலவு, 2020ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என சீனா கூறியுள்ளது. சூரியனின் ஒளியை பிரதிபலிக்கும் பேனல்கள் மூலம் செயற்கை நிலா பிரகாசிக்கும் என செங்டு விண்வெளிஆய்வு மைய இயக்குநர் `வு செங்ஃபெங்’ கூறுகிறார். மேலும் செங்டு நகரின் 50 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுக்கு இந்த செயற்கை நிலவு மூலம் ஒளியூட்ட முடியும் என்று கூறியுள்ள அவர், இதனால் ஆண்டு ஒன்றுக்கு ஏறக்குறைய 240 மில்லியன் டாலர்கள் மிச்சமாகும் என்றும் கூறியிருக்கிறார்.
பூமிக்கு மேல் 500 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கை நிலவால், 10 முதல் 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒளியைப் பாய்ச்ச முடியும். இயற்கை பேரிடரால் மின் தடை ஏற்படும் பகுதிகளிலும் இரவு நேரங்களிலும் இந்த செயற்கை நிலவு மூலம் ஒளியைக் கொடுக்க முடியும் என்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.மேலும் செயற்கை நிலவு வெளிப்படுத்தும் ஒளியின் அளவு மற்றும் செயல்படும் நேரம் ஆகியவற்றை கூட நாம் பூமியில் இருந்தே இயக்க முடியும் என்கின்றனர் சீன விஞ்ஞானிகள்.
இவ்வளவு நன்மை இந்த செயற்கை நிலவு மூலம் நமக்கு இருந்தாலும் திட்டமிட்டப்படி செயற்கை நிலா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு செயல்பட தொடங்கினால் ஒளி மாசு 40 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post