பாகிஸ்தான் பெண்கள் சீனர்களுக்கு விற்கப்படுவது குறித்த விவகாரத்தில், பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானின் மவுனம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
பாகிஸ்தான் நாட்டு ஏழைப் பெண்களை சீனர்கள் திருமணம் செய்வது, சமீப ஆண்டுகளாகப்
பெரிதும் அதிகரித்து வந்தது. குடும்பச் சூழல் மற்றும் ஏழ்மை காரணமாக, சீனர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பாகிஸ்தான் பெண்களில் பலர், சீனா சென்ற பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தங்களை மீட்கும்படி கதறினர்.
இது குறித்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் அரசு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 629
பெண்கள் சீனாவிற்கு விற்கப்பட்டதைக் கண்டுபிடித்தது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரித்த ஒரே நாடாகவும், பாகிஸ்தானுக்கு
அதிகம் கடனுதவி செய்யும் நாடாகவும் சீனா இருப்பதால், இது தொடர்பான அடுத்த கட்ட
விசாரணைக்கு இம்ரான்கானின் அரசு தொடர்ந்து தடைபோட்டு வந்தது.
ஆனால் சமீபத்தில் அசோசியேட் பிரஸ் நிறுவனம் இது தொடர்பான செய்தியை புலனாய்வு
செய்து வெளியிட்டதால் உலகம் இதனை அறிந்து கொண்டது. பாகிஸ்தானில் பெண்களை
வாங்கும் சீனர்களில் சிலரை பாகிஸ்தான் அரசு கைது செய்தாலும், அவர்களை
தண்டிக்கவில்லை. இதனால் சீனர்கள் மிகவும் தைரியமாக பெண்கள் விற்பனையில்
ஈடுபடுவதாக சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும், சீனாவில் உள்ள உய்குர் இசுலாமியர்கள் சீன அரசால் பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர், சீன கடைகளில் இசுலாமிய அரபு எழுத்துகள் அதிகாரபூர்வமாகவே தடை செய்யப்பட்டு உள்ளன, இதுவரை இவை குறித்து இசுலாமிய நாடான பாகிஸ்தான் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே பிரதமர் இம்ரான்கான் அரசின் மீது கோபத்தில் உள்ளனர்.
இம்ரான்கானின் மெளனம் பாகிஸ்தான் மக்களின் கோபத்தை இன்னும் அதிகரித்து உள்ளது. நேற்று பாகிஸ்தானின் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ராஹத் ஜான் அஸ்டின் நேரடியாகவே அந்நாட்டு அரசை விமர்சித்துப் பேசியதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இசுலாமியர்களின் நிலை என்னவாக உள்ளது? – என ஐ.நா.வில் கேள்வி
எழுப்பும் பாகிஸ்தான் அரசு, தனது நாட்டிலும், தனது நட்பு நாடான சீனாவிலும் இசுலாமியர்கள் என்ன நிலையில் உள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் – என மனித உரிமை ஆர்வலர்கள் பாகிஸ்தானிடம் கேள்வி கேட்கின்றனர்.
Discussion about this post