பூமிக்கடியில் அணுசக்தி சோதனையை மீண்டும் ரகசியமாக தொடர்வதாக கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டை, பொறுப்பற்ற மற்றும் உள்நோக்கம் கொண்ட கருத்து என்று கூறி, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
பூமிக்கடியில் அணுசக்தி சோதனைகளை தடைசெய்யும் சர்வதேச ஒப்பந்தத்தை கடைபிடிப்பதாகக் கூறிக்கொண்டாலும், அவற்றை மீறி, சீனா இது போன்ற சிறிய அளவிலான சோதனைகளை செய்து வருகிறது என அமெரிக்கா கடந்த புதன் கிழமை குற்றம் சுமத்தியது. அமெரிக்காவின் இந்த குற்றசாட்டிற்கு பதில் அளித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செயலாளர் ஸாவோ லிஜியான், விரிவான அணுசக்தி-சோதனை-தடை ஒப்பந்தத்தின் நோக்கத்தையும் அவசியத்தையும் புரிந்து, சீனா அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார்.
இது குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டானது, பொறுப்பற்றது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்தார். பின்னர், அமெரிக்கா வெளியிட்ட அணுசக்தி குறித்த ஆய்வறிக்கையில், தேவைப்பட்டால் மீண்டும் அந்நாடு நிலத்தடி அணுசக்தி சோதனையைத் தொடங்கும் என கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இது குறித்து சர்வதேச நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா, தனது நடவடிக்கையை மாற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், என்றும் ஸாவோ லிஜியான் கூறினார்.
Discussion about this post