எந்த உறவுகளுமே இல்லாத எச்ஐவி பாதித்த குழந்தைகளை தன் குழந்தைகளாக கருதி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இலவசமாக பராமரித்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஒருவர். இவரை பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
மனிதநேயம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதை சில மனிதர்கள் மூலம் இயற்கை நமக்கு அவ்வப்போது உணர்த்தும் நிமிடங்கள் வாழ்வின் அற்புதம். நம் தேவைகளை சார்ந்தே ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரத்தில் அடுத்தவரின் தேவை அறிந்து செயல்படுதல் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. தனக்கான குழந்தையை தேடி அலைந்த ஒரு தந்தை மனம் இன்று 45 எச்ஐவி பாதித்த குழந்தைகளை தத்தெடுத்து தன் குழந்தைகளாக பராமரித்து வருவது காண்போரிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கொளத்தூரை சேர்ந்த சாலமனுக்கு திருமணமாகி 8 வருடங்களாக குழந்தை பேறு இல்லை என்பதால், குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தார். சாதாரண குழந்தையை தத்தெடுக்க பல பேர் இருப்பார்கள் என்பதால், உண்மையிலேயே தன்னுடைய தேவையை எதிர்பார்க்கும் குழந்தைக்காக காத்திருந்த போது, ஒரு திருநங்கை மூலம் எச்ஐவி பாதித்த குழந்தையை தத்தெடுத்திருக்கிறார் சாலமன்.
இவர் நடத்தி வரும் இல்லத்தில் இதுவரை 45 எச்ஐவி பாதித்த குழந்தைகளை வைத்து பராமரித்து வருகிறார் சாலமன். இந்த குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள், உணவு, தங்கும் இடம், அறிவை மேம்படுத்த கல்வி என அனைத்தையும் தன் சொந்த செலவில் தந்தை ஸ்நானத்தில் இருந்து முழுமையாக செய்து வருகிறார் சாலமன்.
இங்கு இருக்கும் குழந்தைகள் பல பேருக்கு தாய் தந்தை கிடையாது. சிலருக்கு தந்தை, தாய் யார் என்றே தெரியாது. இன்னும் சிலருக்கோ தனக்கு என்ன நோய் தாக்கி இருக்கிறது என்று கூட தெரியாது. ஆனால் இன்று சாலமன் மூலம் அனைவரும் ஒரே குடும்பமாய், சந்தோஷமாய் தங்களுடைய வாழ்க்கையை புன்னகையோடு எதிர்கொண்டு வருகிறார்கள்.
Discussion about this post