இங்கிலாந்தில் 9 வயது சிறுமி தனது பெற்றோருக்கு எழுதிய கேள்விக் கடிதம் ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன கேட்டாள் அந்த சிறுமி ?
பல நேரங்களில் குழந்தைகளின் கேள்விக்கு நாம் கற்பனைக் கதைகளை பதிலாக கூறுவது உண்டு. ஆனால் சில நேரங்களில் அவர்கள் கேட்கும் பதில் கேள்விகளை சமாளிக்க முடியாமல் நாம் திணறுவதும் உண்டு. அப்படியாக இங்கிலாந்தில் தனது பெற்றோர் சொன்ன கதையைப் பார்த்து, 9 வயது சிறுமி ஒருத்தி கேட்ட கேள்விக் கடிதம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேற்கத்திய நாடுகளில் பல் விழும் பருவத்தில் உள்ள குழைந்தைகள் பயப்படாமல் இருக்க, பல் தேவதைக் கதை என்று ஒன்று உண்டு. அதன்படி, குழந்தைகளுக்கு பல் விழும் போது, பல் தேவதை இரவில் வந்து குழந்தையின் தலையணைக்கு அடியில் ஒரு காசை வைத்து விட்டு பறந்து விடுவாள். இதனை இப்போதும் ஐரோப்பிய நாடுகளின் குழந்தைகள் நம்பி வருகின்றனர். ஆனால், சாம் என்பவரின் மகள் அப்படியல்ல. முதல்நாள் விழுந்த தனது பல்லை தலையணைக்குக் கீழே வைத்துவிட்டு தூங்கப் போன அந்த 9 வயது குட்டிப் பெண், மறுநாள் காலை தனது தலையணக்குக் கீழே காசைப் பார்த்துவிட்டு, தன்னுடைய தாய் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளாள். அந்தக் கடிதத்தை, முதலில் பல் தேவதைக்கு அனுப்புவதாக எழுதிவிட்டு, பின்பு அடித்து விட்டு மாற்றி எழுதியிருக்கிறாள். அதில் அவள் கேட்ட கேள்விதான் அந்தக் கடிதத்தை இணையத்தில் வைரலாக்கி உள்ளது. சிறுமியின் கடிதத்தில் இருந்தது இதுதான்,
அன்பான அம்மா அப்பாவுக்கு,எனக்கு தெரியும் இது உங்கள் வேலைதான். பொய் சொல்வதை நிறுத்துங்கள். ஒரு சின்ன அறிவுரை… ஒரு பவுண்டு காசுக்கு பதிலாக நீங்கள் 100 பவுண்டுகளை வைத்திருக்கலாம். இப்படிக்கு, பொய்யர்களை கண்டுபிடிக்கும் மிகச் சிறந்த துப்பறிவாளி! உங்களுக்கு பிடித்தமான அன்புக் குழந்தை என இருந்தது.
அதற்கு கீழுள்ள பின் குறிப்பில் ’எனது பல்லை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?; – என்ற கேள்வியுடன் அந்தச் சிறுமி கடிதத்ததை முடித்துள்ளார். இந்தக் கடிதத்தை அந்தச் சிறுமியின் தந்தை சாம் ப்ரீடுமேன் தற்செயலாக டுவிட்டரில் பகிர, இப்போது அந்தக் கடிதம் உலக அளவில் வைரலாகி வருகிறது. இந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு ’இந்த ஸ்மார்ட் போன் யுகத்தில் உள்ள இந்த குழந்தைகளுக்கு, ஸ்மார்ட்டான கதைகளைத் தான் சொல்ல வேண்டும்’ என்கின்றனர் இணையவாசிகள்…
Discussion about this post