தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் முழு திருவுருவப்படம் வைக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அகில இந்திய வன்னியர் குல சத்ரிய சங்கங்களின் சார்பில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இட ஒதுக்கீட்டுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தார் என்று கூறினார். தமிழகத்தில் வன்னியர் சமூகத்தை முன்னேற்றுவதற்காகவும், அவர்களின் சொத்துக்களை பாதுகாக்கவும் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் முழு திருவுருவப்படம் வைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.
Discussion about this post