இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சஃபோல்க் நகரில் உள்ள மின்சார வழங்கல் நிறுவனத்தைப் பார்வையிட்டுத் தமிழகத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். அது பற்றிய சிறப்பு தொகுப்பு.
தமிழகத்தில் தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆகஸ்டு 29ஆம் தேதி லண்டனில் உள்ள ஆம்புலன்ஸ் சேவையைப் பார்வையிட்டார். அதன்பின் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டதுடன் அதன் கிளைகளைத் தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டிலும் கையொப்பமிட்டார். பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குச் சென்ற அவர் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சஃபோல்க் நகருக்குச் சென்றார். அங்கு யுகே பவர் நெட்ஒர்க்ஸ் என்கிற மின்சார வழங்கல் நிறுவனத்தைப் பார்வையிட்டார். இந்த நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி, சூரியஒளி மின்னுற்பத்தி ஆகியவற்றில் கிடைக்கும் மின்சாரத்தை எளிய வழிகளில் மின்தொகுப்பில் சேர்த்து இழப்பு இல்லாமல் அவற்றை நுகர்வோருக்கு வழங்கும் பணியைச் செய்து வருகிறது. தமிழகத்தில் காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை இழப்பில்லாமல் எளிய வழியில் மின்தொகுப்பில் சேர்த்துப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தைப் பெறும் வகையில் இந்த நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
அப்போது யுகே பவர் நெட்ஒர்க்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிய அதிகாரி, பிரிட்டனில் 2050ஆம் ஆண்டுக்குள் நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கும் முறையை அறவே ஒழிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார். வாகனப் போக்குவரத்திலும் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் உற்பத்தி, பயன்பாட்டை விரிவாக்கும் வகையில் தங்கள் நிறுவனம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்த முதலமைச்சர், அந்த நிறுவனம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைத் தமிழகத்தில் செயல்படுத்தும் வழிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடன் இருந்தார்.
Discussion about this post