அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்தபோது, முதலீட்டுத் திட்டங்களுக்காக செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலீட்டின் அளவு, கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆகிய விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற தொழில் முனைவோர் சந்திப்பின்போது, எஸ்டி எல்என்ஜி எல்எல்சி, லிங்கே டெக்னாலஜீஸ், எமர்சன், அக்குயில் சிஸ்டம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் இரண்டாயிரத்து 780 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம்18 ஆயிரத்து 160 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தொழில்முனைவோர் சந்திப்பின்போது, வேரபிள்மெம்ஸ், இண்டி ஹோட்டல்ஸ், உள்ளிட்ட 15 நிறுவனங்களுடன் 305 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆறாயிரத்து 560 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
துபாய் நகரில் நடைபெற்ற தொழில்முனைவோர் சந்திப்பின்போது டிபி வேர்ல்டு ஒருங்கிணைந்த வணிகப் பூங்கா நிறுவனம், கெயன்ட் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் மூவாயிரத்து 750 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம் பத்தாயிரத்து எண்ணூறு பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
முதலமைச்சரின் அமெரிக்க, துபாய் பயணத்தின்போது எட்டாயிரத்து 835 கோடி ரூபாய் முதலீட்டுக்காக மொத்தம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post