தமிழகத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 375 ஆசிரியர்களில், 15 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவுரவித்தார்.
ஆசிரியர் தினத்தையொட்டி சிறந்த கல்வி தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு சிறப்பாக பணியாற்றிய 375 ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகள், வெள்ளி பதக்கங்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 6 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாக கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கோடியே 34 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு பாலங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவும் வகையில், மாநில நலவாழ்வு குழுமத்தால் உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிய இணைய தளம் மூலம் கண்தானம் செய்ய விரும்புவோர், தங்களது பெயர், இருப்பிட முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, கண்தானத்துக்கான உறுதி மொழியை ஏற்ற பின்பு அதற்கான சான்றினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமது கண்களை தானமாக வழங்க முதலமைச்சர் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து, அதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 12 ஆசிரியர்களுக்கு, விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சியர் கந்தசாமி, தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post