சேலம் மாவட்ட தலைவாசலில் உலக தரத்தில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் அமைய உள்ள கால்நடை பூங்கா மற்றும் மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் நவீனக் கால்நடைப் பூங்கா நிறுவப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். ஆயிரத்து நூற்று இரண்டு புள்ளி இருபத்து ஐந்து ஏக்கர் பரப்பரளவில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் திறக்கப்பட இருக்கிறது. கால்நடைப் பண்ணைப் பிரிவு, கால்நடை உற்பத்திப் பொருள்கள் பதப்படுத்துதல் பிரிவு, மீன்வளப் பிரிவு, விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு வளாகம், தொழில் உருவாக்கப் பிரிவு என 5 பிரிவுகளாக இந்த கால்நடை பூங்கா அமைய உள்ளது. மேலும் இங்கு அமையவுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடைத்துறையின் பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ளும் வகையில் பயிற்சி கூடங்கள், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை இடம்பெற உள்ளது. முன்னதாக விழா நடைபெறும் இடத்தை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
Discussion about this post