வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில், புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
புதிய தொழில் கொள்கையின் சிறப்பு அம்சங்களாக தமிழக மாவட்டங்கள் 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. A பிரிவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. B பிரிவில் கோவை, சேலம், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்டங்களும், C பிரிவில் தருமபுரி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் A பிரிவு மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை, முதலீட்டு மானியமும், B பிரிவு மாவட்டங்களில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு 20 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், C பிரிவு மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை, மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் பூங்காக்களில் மின்னணு வன் பொருள் நிறுவனம் தொடங்கினால், முதலீட்டு மானியம் போல நில மானியமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. A மற்றும் B மாவட்டங்களில் ELCOT, SIDCO, SIPCOT போன்ற நிறுவனங்களிடம் இருந்து குத்தகை மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களுக்கு முத்திரைத் தாள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும் என்றும், C மாவட்டங்களில் மேற்கண்ட நிறுவனங்களிடம் இருந்து குத்தகை மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களுக்கு, முத்திரை தாள் கட்டணத்தில் நூறு சதவீதம் சலுகை வழங்கப்படும் எனவும் புதிய தொழில் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post