காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கும், மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது குறித்தும், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கையை ஏற்றும், மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 புள்ளி பூஜ்யம் ஒன்று அடியாகவும், நீர் இருப்பு 64 புள்ளி எட்டு ஐந்து டிஎம்சியாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இது 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க போதுமான அளவு நீர் என்றும் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரினை விவசாயிகள் திறம்பட பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கீழ்க்கண்ட அறிவுரைகளையும் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் வழங்கியுள்ளார். அதன்படி, டெல்டா பகுதிகளில் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்சாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையின் மூலம் ஏ & பி பாசன வாய்க்கால்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் சி & டி பாசன வாய்க்கால்களும் விரைவாக தூர்வாரப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
குறுவை சாகுபடிக்கு ஏற்ற குறுகிய கால நெல் ரக விதைகளை தேவையான அளவு இருப்பில் வைத்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும், நெல் சாகுபடிக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், உழுவை இயந்திரங்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நெல் சாகுபடிக்கு தேவைப்படும் ரசாயன உரங்களை போதுமான அளவு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை மையங்களிலும் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய நெல் நாற்றங்கால் அமைப்பதற்கு வேளாண்மைத் துறை அலுவலர்கள் விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியை மேற்கொள்வதற்கு தேவையான பயிர்க் கடன் வசதி பெறுவதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாக் கடன் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது நிலவிவரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து, பரிந்துரைக்கப்பட்ட தனிமனித இடைவெளியினை பின்பற்றி சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொண்டு உயர் விளைச்சல் பெற வேண்டுமென டெல்டா மாவட்ட விவசாயிகளை அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது, உரிய காலத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் சூழல் உள்ளதால், இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் நமது மாநிலம் ஒரு புதிய சாதனை அளவை எட்டும் என நம்புவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Discussion about this post