அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட தேர்தல் பிரசரத்தில் ஈடுபடுகிறார். இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 27 ஆம் தேதி காலை 9 மணிக்கு சங்கராபுரத்தில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
உளுந்தூர்பேட்டை காலை 11.30 மணிக்கு விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மாலை 5.20 மணிக்கு புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என்.ஆர்.காங்கிரசைச் சேர்ந்த நாராயணசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதேபோன்று தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
மாலை 6.20 மணிக்கு கடலூர் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் கோவிந்தசாமி ஆதரித்து ரெட்டிச்சாவடியிலும், அதைத் தொடர்ந்து உழவர் சந்தையிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இரவு 8 மணிக்கு பரங்கிபேட்டிடையில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் புவனகிரி மற்றும் சிதம்பரத்திலும் துணை முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.
28 ஆம் தேதி வியாழக்கிழமை காலை, மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் ஆசைத்தம்பியை ஆதரித்து செம்பனார்கோவில், குத்தாலத்தில் அவர் பிரச்சாரம் செய்கிறார். காலை 11.30 மணிக்கு பேரளத்தில் நாகை அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். மாலை 4 மணிக்கு திருவாரூரில் நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சரவணன், திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
மாலை 5.30 மணிக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் நடராஜன், தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காந்தி ஆகியோரை ஆதரித்து தஞ்சாவூரில் இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதேபோன்று திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து திருவெறும்பூர் மற்றும் திருச்சி கிழக்கு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்கிறார்.
29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கரூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு திரட்டுகிறார். 30 ஆம் தேதி சனிக்கிழமை தர்மபுரி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பாப்பிரெட்டிபட்டி, அரூர், ஓசூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் பிரசாரம் செய்கிறார்.
31 ஆம் ஞாயிற்றுக்கிழமை வேலூர், அரக்கோணம், ஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதாரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார்.
Discussion about this post