சென்னை வண்ணாரப்பேட்டை போராட்ட குழுவிற்கு சாதகமான அறிக்கையை, தமிழக அரசு இரண்டொரு தினங்களில் அளிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளதாக, CAA-வுக்கு எதிரான வண்ணாரபேட்டை போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவினர் நேற்று இரவு சந்தித்தனர். சுமார் ஒன்றரை மணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.
அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிலுள்ள சில சந்தேகங்களுக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும் விளக்கம் கிடைத்தவுடன் போராட்டக் குழுவுக்கு சாதகமான பதில் அளிக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் போராட்டக் குழுவினர் பேட்டியளித்தனர். மேலும், போராட்ட களத்தில் உள்ள அனைவருடனும் கலந்து பேசி, போராட்டத்தை கைவிடுவது குறித்து, முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
Discussion about this post