துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. டூ பிளஸ்ஸி, மொயீன் அலி, ராயுடு ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாயினர். தொடக்கவீரரான ருத்ராஜ் கெய்க்வாட், நிலைத்து நின்று விளையாடி 88 ரன்கள் சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 26 ரன்னும், பிராவோ 23 ரன்னும் சேர்த்தனர்.
157 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி வீரர்கள், சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே சேர்த்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.
அபுதாபியில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Discussion about this post