கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகவும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்கவேண்டுமெனவும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் மக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
இதன்படி, இன்று காலை 7 மணிக்கு மக்கள் ஊரடங்கு தொடங்கிய நிலையில் சென்னையின் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பால் விநியோகம், நாளிதழ் விநியோகம் ஆகியவை காலை 7 மணிக்குள் நிறைவுற்ற நிலையில், மக்கள் வீடுகளிலேயே இருந்து ஊரடங்கிற்கு ஆதரவளித்து வருகின்றனர்.
ஏற்கெனவே அறிவித்தப்படி, கடைகள், ஓட்டல்கள், சிறிய நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்பட வில்லை. பெரும்பாலான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மக்கள் ஊரடங்கிற்கு பொதுமக்கள் அதரவளித்து வருகின்றனர்.
மக்கள் நலன் கருதி மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் ஆகியவை செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை பாராட்டும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து மாலை 5 மணிக்கு கைதட்டி பாராட்ட வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post