கொடிது கொடிது கொரோனா கொடிது… அதனினும் கொடிது தொற்றுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. அதுவும் உடன் இருந்த மருத்துவர்களே இந்த ஈனச் செயலில் ஈடுபட்டது. தனிமையில் எல்லை மீறிய தரம் கெட்ட செய்கையினால் மருத்துவப் பதர்கள் சிக்கிய பின்னணி இது…
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் விசாகா கமிட்டியிடம், பெண் மருத்துவர்கள் இருவர் கண்ணீருடனும் பாலியல் வன்கொடுமை புகாருடன் வந்து நிற்கும் வரை மருத்துவர்கள் வெற்றிச்செல்வன், மோகன்ராஜின் கோர முகம் வெளியில் தெரியவில்லைதான்…
கொரோனா காலத்தில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் கடலூரைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் மற்றும் தருமபுரியைச் சேர்ந்த மோகன்ராஜ். முதுகலை மருத்துவர்களான இருவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராகவும், கண்காணிப்பாளராகவும் பணி செய்து வந்துள்ளனர்.
கொரோனா காலத்தில் ஒருவாரம் பணி செய்துவிட்டு, ஒருவாரம் தனிமைப் படுத்திக்கொள்வார்கள். தியாகராய நகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது, அவர்கள் தங்கியிருந்த அதே விடுதியில், ஒப்பந்த மருத்துவர்களான காரைக்குடி மற்றும் வேலூரைச் சேர்ந்த 2 பெண் மருத்துவர்களும் தங்கியிருந்துள்ளனர். இளங்கலை மருத்துவர்களான இவர்கள், வெற்றிச்செல்வன், மோகன் ராஜுடன் மரியாதை அடிப்படையில் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி விடுதியில் தனிமையில் இருந்த வெற்றிச் செல்வன், காரைக்குடி பெண் மருத்துவரை தன்னுடைய அறைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோல் செப்டம்பர் மாதம், மருத்துவர் மோகன்ராஜும் வேலூரைச் சேர்ந்த பெண்மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இரண்டு பெண் மருத்துவர்களும் விசாகா கமிட்டியிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, விசாரணையில் உண்மை தெரிய வந்துள்ளது. தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மனிதப் புனிதர்களாக மதிக்கப்படவேண்டிய மருத்துவர்கள் இருவர் தங்களின் அநாகரீக நடத்தையால் மனிதப் பதரிலும் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Discussion about this post